கனிமொழி எம்.பி. pt
தமிழ்நாடு

தமிழ்நாடு கே.வி. பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் ‘0’! கனிமொழி எம்.பி. பகிர்ந்த ட்விட்டர் பதிவு!

தமிழ் ஆசிரியர்கள் நியமனம்: கே.வி. பள்ளிகள் விவகாரத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி! பதிலளித்த மத்திய அரசு!

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் மொழியை கற்றுத் தர எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என தமிழக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பிருந்தநிலையில், அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் அமர்வு ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தொடங்கிய முதல் நாளிலிருந்தே மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரத்தில் திமுக போன்ற எதிர்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விவாதங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்தவகையில், மும்மொழி கொள்கை கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எத்தனை தமிழ், இந்தி, சமஸ்கிருதம் மொழிப் பாடங்களின் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமான பதிலை அளிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் “0”. ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.

அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய கேள்வி மற்றும் அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதில் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி நாட்டில் எத்தனை மாணவர்கள் மூன்றாவது மொழியைப் படிக்கிறார்கள் எந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது எனக் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எத்தனை பள்ளிகளில் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றும் இந்தி மாணவர்கள் எத்தனை பேர் பிற இந்திய மொழிகளை கற்கிறார்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.