தமிழ்நாடு

'இளையராஜாவுக்கு யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டுப்போட மாட்டார்' - சீமான் கடும் விமர்சனம்

kaleelrahman

திராவிட மாடல் என்பது செயல் அரசியலோ, சேவை அரசியலோ கிடையாது, அது செய்தி அரசியல் மட்டுமே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது... இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும், அவர் மகன் யுவன்சங்கர் ராஜா ஒட்டுப் போட மாட்டார். பட்டியலினத்தவர் பழங்குடியினரை குடியரசு தலைவராக்கியவர்கள், அவர்களை பிரதமராக்க முடியுமா?.

செய்தி அரசியல் தான் திராவிட மாடல் என கூறிய சீமான், செயல் அரசியலோ, சேவை அரசியலோ திமுக அரசில் கிடையாது, செய்தி அரசியல் மட்டுமே. அரை நூற்றாண்டு காலமாக திமுக அரசு செய்தி அரசியலை செய்து வருகிறது. சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என கூறும் திமுக, சொன்னதை செய்ய மாட்டார்கள், சொல்லாததை மட்டுமே செய்வார்கள்.

எங்களுக்கு காங்கிரஸ் இன பகைவன். பாஜக மனித குல பகைவன். இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால், பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்திய விடுதலைக்கு ஆர்எஸ்எஸ் போராடினார்களா? இந்தியாவில் ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இஸ்லாமிய, கிறிஸ்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டும் இவர்கள், அதை நிறுத்தி விட்டால் இந்தியா என்ற ஒரு நாடே இருக்காது.

இந்தியாவில் எல்லா மொழிகளும் இருக்கும் என்றால், ஒரு நாடாக இருக்கும், ஒரே மொழியாக இருக்கும் என்றால், இந்தியா பல நாடுகளாகும். உங்கள் தாய் அழகானவள் என்றால் பிரச்னை இல்லை, ஆனால் என் தாய் அசிங்கமானவள் எனக்கூற தகுதியில்லை. வரியை வசூலித்து கொடுக்கும் மத்திய அரசு வட்டி கடை நடத்துகிறதா அல்லது கந்து வட்டி நடத்துகிறதா அல்லது கவர்மெண்ட் நடத்துகிறதா.

இஸ்லாமியர்களின் மசூதி இருக்கும் இடங்களிலெல்லாம் இவர்களின் கோயில்கள் இருப்பதாக கூறுகிறார்கள் மக்களை பற்றி சிந்திக்கிறவர்களுக்கு சாதி, மதம், கடவுளை நினைக்க நேரமிருக்காது சாதி, மதம், கடவுளை நினைப்பவர்களுக்கு மக்களை பற்றி சிந்திக்க நேரமிருக்காது என கடுமையாக சாடினார்.