தமிழ்நாடு

கோயில் புனரமைப்பு செய்வதாக பண மோசடி: யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்திடம் விசாரணை

நிவேதா ஜெகராஜா

கோயில் புனரமைப்பு செய்வதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக யூ-ட்யூப்பரான கார்த்திக் கோபிநாத் என்பவரிடம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை செய்துவருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள 2 கோயில்களை புனரமைப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் என்பவர் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில் என்பதால் முறையாக அனுமதி வாங்காமல் பண மோசடி செய்ததாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து இருந்தார். புகார் தொடர்பாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் கோபிநாத்தை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரடியாக விசாரித்தனர். விசாரணையில், ஆவடியில் உள்ள வங்கி கணக்கு ஒன்றின் மூலமாக கார்த்திக் கோபிநாத் பணத்தை வசூலித்தது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விசாரணையானது ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து அவரிடம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோரால் நடத்தப்பட்டிருக்கிறது.

விசாரணை முடிவில், காவல் ஆணையரகம் தரப்பில் "கார்த்திக் கோபிநாத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், கார்த்திக் கோபிநாத்துக்கு, `கார்த்திக் கோபிநாத் தனது சொந்த செலவில் சிலைகளை சீரமைத்து தருகிறேன் என அறநிலையத்துறைக்கு விண்ணப்பம் வழங்கி விட்டு, பின் பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்தது சட்டப்படி குற்றமாகும். இதுவரை மக்களிடம் வசூல் செய்யப்பட்ட முழு பணத்தையும் கோவில் நிர்வாகத்திடம் அவர் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை பெற்ற பணத்தை ஒப்படைக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.