பட்டியல் சமூக மாணவரை வெட்டியவர்கள் கைது PT
தமிழ்நாடு

சிவகங்கை | ’நீ எப்படி புல்லட் ஓட்டலாம்?’ பட்டியல் சமூக மாணவரின் கையை வெட்டிய கொடூரம் - நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பைக் ஓட்டி சென்றதாக கூறி கையை வெட்டிய கொடூர செயல் நடந்துள்ளது.

PT WEB
  • பட்டியலின சாதி எனக் கூறி தங்களை சாக்கடைகளில் கிடக்கும் பன்றிகளை விட மோசமாக நடத்துவதாகவும், தாங்கள் படிப்பதும் வீடு கட்டுவதும் பைக் ஓட்டுவதும் பிடிக்காமல் கீழ் சாதிக்காரன் எதற்கு இதையெல்லாம் செய்கிறீர்கள் எனக்கூறி சாதி ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும் கைகள் வெட்டப்பட்ட கல்லூரி மாணவனின் சகோதரர் வேதனை தெரிவித்துள்ளார்.

புல்லட் ஓட்டியதால் தாக்குதல்..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடவூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராமன்-செல்லம்மா தம்பதிகளின் மகன் அய்யாசாமி (வயது19). இவர் சிவகங்கை அரசு கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

அய்யாசாமியின் அப்பா சிறுவயதிலேயே இறந்து விடவே, சித்தப்பா பூமிநாதனை மறுமணம் செய்துகொண்டு ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அக்கிராமத்தில் சற்று வசதியாகவும், புதிதாக வீடுகள் கட்டியும் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் முன்னேற்றம் அதே கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சித்தப்பா பூமிநாதன் புதிதாக புல்லட் பைக் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய மறுநாளே இவர்கள் அந்த பைக்கை அடித்து உடைத்து உள்ளார்கள். பூமிநாதனையும் அடிக்க முயற்சித்துள்ளார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், பிறகு ஊரில் வைத்து பேசி முடித்துள்ளார்கள்.

கைகளை வெட்டிய கொடூரம்..

மேற்கண்ட விவகாரத்தை தொடர்ந்து நேற்று மாலை இளைஞர் கல்லூரி முடித்துவிட்டு வீடுவரும் பொழுது, வீட்டின் அருகே மறைத்திருந்து ’இந்த ஜாதியில இருந்துகிட்டு எங்க முன்னாடியே நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்’ என்று கூறி இளைஞரின் இரண்டு கைகளையும் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. கை இருந்தால்தானே ஓட்ட முடியும் என்ற நோக்கத்துடன் அவரின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படுகாயமடைந்த இளைஞர் அய்யாசாமியை அழைத்துக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வினோத்

குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் பூமிநாதனின் வீட்டை மாற்று சமூகத்தினர் அடித்து நொறுக்கி உள்ளார்கள், இதில் ஜன்னல், கதவு, ஸ்விட்ச் போர்டு, ஓடு என வீடு சேதம் அடைந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர்.

வல்லரசு

இதில் வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்கடையை பார்ப்பது போல் பார்க்கிறார்கள்..

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, மதுரை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி மாணவரின் சகோதரர் பேசும் போது, ”எங்களை சாக்கடையை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். எல்லாரும் செல்லும் பாதையில் நாங்கள் செல்லக்கூடாது, வண்டியில் போகக்கூடாது, பெரிய பைக் வாங்கக்கூடாது, வேகமாக ஓட்டக்கூடாது முதலிய கொடுமைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. எங்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை.

நாங்கள் இரண்டு மாடி வீடு கட்டியதிலிருந்து தான் அதிகமாக பிரச்னைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். வீடு கட்டும்போதே அதற்காக செல்லும் வண்டிகளை செல்லவிடமால தடுப்பது, பள்ளம் வெட்டுவது, தண்ணீர் டேங்கை உடைப்பது, மின்சார லைனை கட் செய்வது போன்ற பிரச்னைகளை செய்துவந்தார்கள். நாங்களும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க அவர்கள் வந்து சரிசெய்ய என தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.

என் சகோதரர் வண்டியில் செல்லும்போது சாதி பெயரை சொல்லித்திட்டி நீயெல்லாம் எப்படி பைக் ஓட்டலாம் என வெட்டியுள்ளனர். உயிருக்கு பயந்து ஓடிவந்த தம்பியை மருத்துவமனையில் சேர்க்க அழைத்துவந்த பிறகு, எங்கள் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார்கள். நீங்க எப்படி வாழ்ந்துவிடுவீங்க பார்க்கலாம், என்னைக்கு இருந்தாலும் உங்க சாவு எங்க கைல தான்” மிரட்டியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது காயம்பட்ட அய்யாசாமிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.