சென்னையில் அரசுப் பேருந்தில் சென்ற பெண்களை ஓசியில் பயணம் செய்வதாக இளைஞர்கள் இழிவுபடுத்திப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற பேருந்து வடபழனி தனியார் பள்ளி அருகே வந்த போது 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர். ஏற்கெனவே அமர்ந்திருந்த மூதாட்டிகள் மற்றும் பெண்களை இருக்கையிலிருந்து எழுப்பிய அவர்கள், நீங்கள் ஓசிடிக்கெட்டில் தானே பயணம் செய்கிறீர்கள், நாங்கள் காசு கொடுத்து பயணிக்கிறோம் என இழிவு செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
இதைக் கண்டித்ததுடன் வீடியோவும் எடுத்த பெண் பயணி ஒருவரை ஆபாசமாக திட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இழிவான செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது, பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து, கைது செய்துவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து வடபழனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.