நண்பர்களுடன் மது அருந்த நொய்யல் ஆற்றங்கரைக்கு சென்ற இளைஞர் நீரில் மூழகி பலியானார். இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார் ஊட்டியை சேர்ந்த லோக ரத்தினம் (27). திருப்பூருக்கு வந்து சில வாரங்களே ஆன நிலையில் நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மங்கலம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்பொழுது லோகரத்தினம் தவறி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அவரது உடல் கிடைக்காத நிலையில், இன்று அவரது உடலை மீட்ட மங்கலம் போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லோக ரத்தினத்துடன் மது அருந்த சென்ற அவரது நண்பர்கள் வினோத், ராஜா, சுபாஷ், மாணிக்கவேல் ராஜா உள்ளிட்ட 5 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த லோக ரத்தினத்தின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்லடம் அரசு மருத்துவமனையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.