தமிழ்நாடு

கட்டுப்பாடான காட்டாற்று வெள்ளம்

கட்டுப்பாடான காட்டாற்று வெள்ளம்

webteam

ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் நடந்துவரும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உறுதியுடனும், அதேநேரம் கட்டுப்பாடாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த 8ம் தேதி சிறுநீரோடையாகி அலங்காநல்லூரில் ஆறாக மாறி, இன்று தமிழகம் முழுவதும் கட்டுப்பாடான காட்டாற்று வெள்ளமாக பரவியுள்ளது. எந்தவிதமான கட்சி பின்னணியும் இல்லாமல் ஒன்று திரண்ட இளைஞர்கள் யாருடையை தலைமையும் இல்லாமல், அதேநேரம் கட்டுப்பாடுடனும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலான இளைஞர்கள் முதன்முறையாக களமிறங்கி போராடுகின்றனர் என்பதே களநிலவரம். இந்த மாபெரும் இளைஞர்கள் எழுச்சி கட்டுப்பாடான காட்டாற்று வெள்ளமாகவே இன்று ஆர்ப்பரித்து வருகிறது.

அலங்காநல்லூரில் போராடும் இளைஞர்களுக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் டிராக்டரில் உணவும், தண்ணீரும் கொடுத்து ஆதரித்து வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் சாலைகளின் ஓரத்தில் நின்று இந்த இளைஞர்கள் போராடுவதை தமிழகம் முழுவதும் பார்க்க முடிந்தது. சென்னை மெரினாவில் போராடிவரும் இளைய தலைமுறைக்கு ஆதரவுக்கரம் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நீண்டுகொண்டே இருக்கிறது. மெரினாவில் போராடுபவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தண்ணீர் பாக்கெட்டுகள், உணவுப் பொட்டலங்கள் என பல்வேறு வகைகளில் அளித்து வருகின்றனர். பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி கூடியுள்ள இந்த இளைஞர்கள் பல இடங்களில் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ததுடன், மெரினாவில் உணவுப் பொட்டலங்களின் மிச்சங்கள் உள்பட தாங்கள் பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளை அகற்றியதும் சமூகத்தின் மீது அவர்களுக்குள்ள உண்மையான அக்கறையைக் காட்டியது.

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டைக் காக்க மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் களமிறங்கினர். மனிதச் சங்கிலியாக, ஆர்ப்பாட்டமாக பல்வேறு வடிவங்களில் அவர்களும் தங்களது ஆதரவினை அழுத்தமாகப் பதிவு செய்தனர். உணர்ச்சிவயமான நிலையில் இந்த இளைஞர் கூட்டம் காணப்பட்டாலும் கட்டுக்கோப்புடனும், அறவழியிலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதற்கு பல சான்றுகளைக் கூறலாம்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் அறவழியில் மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது எதிரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் மாடியில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். அந்த இளைஞருக்கு போராட்டம் நடத்தியவர்கள் தரப்பிலிருந்து கண்டனக் குரல் தீவிரமாக எழுந்தது. அவரைக் கைது செய்து அழைத்துச் செல்லுமாறு போராட்டம் நடத்திய மாணவர்கள் தரப்பிலிருந்தே குரல்கள் எழுந்தன. வன்முறை மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஆணித்தரமாக நம்பும் இந்த இளையோர் கூட்டம், இதற்கு தீர்வினை அறவழிப் போராட்டமே மூலமே எட்ட முடியும் என்பதையும் உறுதியாக நம்புகிறது என்றே கூறலாம்.