தமிழ்நாடு

பிறந்தநாளில் உயிரிழந்த இளைஞர் - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்

பிறந்தநாளில் உயிரிழந்த இளைஞர் - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்

rajakannan

திருநின்றவூரில் விஷவாயு தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் அருகே பேரத்தூர் மாந்திப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (24). இவர் சென்னை, வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். தன்னுடைய பிறந்தநாளையொட்டி நண்பர் நரேந்திரன் (31) என்பவருடன் ஓம்சக்தி நகரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு, ஆசிரமத்தின் சந்தானம் குருஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் இருவரும் கழிவுநீர் தொட்டியில் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கழிவுநீர் தொட்டியில் முதலில் நரேந்திரன் இறங்கியுள்ளார். அப்போது அவருக்கு விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். இது தெரியாமல், சம்பத்குமார் தொட்டி உள்ளே இறங்கி, அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் விஷவாயு  தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதற்குள் சம்பத்குமார் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். 

பின்னர், உயிருக்கு போராடிய நரேந்திரனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார், சம்பந்த்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தானம் குருஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.