தமிழ்நாடு

திருவாரூர்: அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

திருவாரூர்: அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

ச. முத்துகிருஷ்ணன்

திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் 31 வயது நிரம்பிய சின்னத்துரை. இவருக்கு திருமணம் ஆகி மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கிராமத்தில் பேனர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பேனர் அருகில் இருந்த மின்சார கம்பியில் பட்டதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த வந்த முத்துப்பேட்டை போலீசார் இளைஞர் உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருத்துறைப்பூண்டி அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.