தமிழ்நாடு

‘நண்பர்களுக்கு மெசேஜ்’ -ஆன்லைன் கடன் தொல்லையால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

Sinekadhara

செங்கல்பட்டில் ஆன்லைன் கடன்காரர்கள் கொடுத்த தொல்லையால் வாலிபர் ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) ( ரங்கநாதன்). இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக கெட் ருபி டாட் காம் என்கின்ற ஆன்லைன் மூலம் 4000 ரூபாய் ஆன்லைனில் கடன் பெற்றிருக்கிறார். வட்டியுடன் 4305 ரூபாய் திருப்பி செலுத்த வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் கடனை செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது.

கடன் கொடுத்த அந்த நிறுவனம் கஸ்டமர்கேர் மூலம் இவரை தொடர்புகொண்டு நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்களைப் பற்றி அவதூறாக குறுஞ்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் மானத்தை வாங்கிவிடுவோம் என எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து  நேற்று அந்த ஆன்லைன் நிறுவனம் குறுஞ்செய்தியை இவருடைய நண்பர்களுக்கு செய்தியாக அனுப்பியுள்ளனர். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் விவேக்கிற்கு போன் செய்து விசாரித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விவேக் பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆன்லைனில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் ஆன்லைன் கடன் என்ற பெயரில் ஆன்லைன் லோன் கொடுக்கின்றனர். இதில் கட்டமுடியாத நபர்கள் இதுபோல தவறான முடிவுகளை எடுப்பது தற்போது அதிகரித்துக்கொண்டு வருகின்றது.