நாமக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன் பட்டியில் உள்ள கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். அதே கோழிப் பண்ணையில் ஒராண்டிற்கு முன்பு வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் அவர்களது குடும்பத்துடன் இணக்கமாக பழகி வந்த்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கோழிப்பண்ணைக்கு வந்த கணேஷ் சிறுமியுடன் சகஜமாக பழகி விளையாடி கொண்டிருந்தார். அதன் பின்னர், அந்த சிறுமியை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று அருகில் இருந்த முட்புதரில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டனர். ஆனால் கணேஷ் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது.
இதனையடுத்து சிறுமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தை நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.