85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தன. சுஜித்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாள் முதல் மீட்பு பணிகளை கவனித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உருக்கமான இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் " நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய்
நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது!
மனதை தேற்றி கொள்கிறேன்; ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்!
கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை
85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது
இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை" என தெரிவித்துள்ளார்.