தமிழ்நாடு

திருச்சி முக்கிய சாலைகளில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

PT WEB

திருச்சி மாநகர் மாவட்ட சாலைகளில் தினமும் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது வழக்கமாகி வருகிறது. இதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர்கள் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு, வீலிங் செய்து வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள காவிரி பாலத்தில் ஒரு இளைஞர் இரவில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாகச வீடியோவுடன், சினிமா வசனங்கள் இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் அதிகம் திருச்சி மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் எடுக்கப்பட்டவை.

இந்த சாகச நிகழ்ச்சி ஒருநாள், இரண்டு நாள் மட்டுமல்ல தினமும் நடக்கிறது என்பது தான் அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால், ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும். இந்த இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்திற்காக, யாரோ, எவரோ எதுவும் தெரியாதவர்கள் பாதிக்கப்படுவதா? என பைபாஸ் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இதுபோல அஜாக்ரதையாகவும், விபத்து ஏற்படுமாறும் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, நூதன தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது திருச்சி மாநகரத்தில் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், குட்செட் ரோடு பகுதிகளிலும், கல்லணை சாலை, திருச்சி-அரியலூர் புதிய தேசிய நெடுஞ்சாலை, அதிலுள்ள இணைப்பு சாலை உள்ளிட்ட சாலைகளில் 10த்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீலிங் செய்துவருகின்றனர். அவர்களின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது.