சென்னை ஓட்டேரி பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த முதியவரை காப்பாற்றச் சென்ற இளைஞரை காவல்துறை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரி பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, பாலத்தின் கீழே செல்லும் கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். அவர் விழுவதை பார்த்த ஒருவர் கால்வாயில் இறங்கி முதியவரை காப்பாற்றும் முயற்சியில் ஆற்றில் குதித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து அவர் முயற்சி செய்தும் முதியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆற்றில் காப்பாற்றுவதற்காக இறங்கிய நபர் ஆற்றில் சிக்கி கொண்டார். அவர் தத்தளிப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து காவல்துறை மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். ஓட்டேரி பாலத்திற்கு விரைந்து ஆற்றில் தத்தளித்த நபரை மீட்பு உபகரணங்கள் உதவியோடு பத்திரமாக மீட்டனர். விசாரணை செய்ததில் அப்பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. மேலும் ஆற்றில் விழுந்து மாயமான முதியவர் பெயர் ஏழுமலை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பல மணி நேரம் தேடியும் ஏழுமலையை கண்டுபிடிக்க முடியவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.