தமிழ்நாடு

நிறைவுபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை பிடித்து கார்த்திக் என்பவர் முதலிடம்

நிவேதா ஜெகராஜா

8 சுற்றுகளாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றுள்ளது. 8 சுற்றுகளையும் மொத்தமாக சேர்த்து கிட்டத்தட்ட 1,000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன.

இப்போட்டி காலை 8 மணியளவில் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 415 வீரர்களும்,1020 காளைகளும் விளையாடின. அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கு 75 நபர்கள் வீதம் 8 சுற்றுகள் நடைபெற்றது. போட்டியின் முடிவில் 21 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து 18 காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார் இரண்டாவது இடத்தையும்; 13 காளைகளை பிடித்த சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் எட்டு சுற்று முடிவில் 46 பேர் காயமடைந்தனர். அதில் 19 பேர் மாடுபிடி வீரர்கள். காளையின் உரிமையாளர்கள் 11 பேரும், பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் உட்பட 16 நபர்கள் காயமடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக 25 நபர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.