கிருஷ்ணகிரியில் நூற்பாலையில் பணிபுரியும் தற்காலிக ஊழியரின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பணிக்கு சென்ற நாராயண நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ‘பேல் பிரேக்கர்’ இயந்திரத்தில் பஞ்சை விடும்போது, அவரின் வலது கை உள்ளே மாட்டிக் கொண்டது. அவர் வலியில் அலறித்துடிக்க, ஒருசில விநாடிகளில் கை முழுமையாக துண்டிக்கப்பட்டது.
2 மணிநேர போராட்டத்திற்கு பின் பாதிக்கப்பட்ட சரவணனை இயந்திரத்தில் இருந்து வெளியே எடுத்த ஊழியர்கள், அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து சரவணன் மேல்சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளார். முன் அனுபவம் இல்லாதவர்களை, இதுபோன்ற ஆபத்தான பகுதியில் வேலையில் அமர்த்தியது ஆலை மேலாளரின் அலட்சிய போக்கை காட்டுவதாத உடன் பணிபுரியும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.