உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர் புதியதலைமுறை
தமிழ்நாடு

புறா பிடிக்கச் சென்று உயிரை விட்ட இளைஞர்.. ஒரு மணி நேரமாக போராடி உடலை மீட்ட தீயணைப்புத்துறை

PT WEB

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் வரதராஜ் (32). இவரும், இவரது நண்பர் ராஜி (38) ஆகிய இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறை தினங்களில் அவ்வப்போது கிணறுகளுக்கு சென்று அங்குள்ள புறாக்களை பிடிப்பதை இருவரும் வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர். அப்படி, நேற்றைய தினம் மலையாம்பட்டி பகுதி அருகே வீரன் என்பவரது 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் புறா பிடிக்கச் சென்றுள்ளனர்.

அங்கு சென்று புறாவைப் பிடிக்க வலை விரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நிலை தடுமாறிய வரதராஜ் கிணற்றில் விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது நண்பன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட ராஜி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துவிட்டு, ராசிபுரம் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்தோடு, போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிரிழந்த வரதராஜின் சடலத்தை மீட்டனர். பின்னர், சடலத்தை கைப்பற்றிய நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புறா பிடிக்க சென்றபோது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து இளைஞர் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.