திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த 16 வயது சிறுமியுடன், அதே பகுதியில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஈரோட்டை சேர்ந்த நிவேந்திரன் (23) என்ற இளைஞர் பழகியுள்ளார். இவர் அந்த சிறுமியிடம் தவறான எண்ணங்களுடன் பேசி வந்துள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 27ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை ஈரோட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என சேலையூர் காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்ததில், சிறுமியை நிவேந்திரன் அழைத்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நிவேந்திரனை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.