திருப்பூரில் கத்தி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை சேர்ந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான பெண் ஒருவர் தனது கணவரோடு கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அந்த வேலை பிடிக்கவில்லை என்ற காரணத்தால், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர்களது சொந்த ஊரான ஒடிசாவிற்கே சென்றுவிடலாம் நினைத்து, திருப்பூர் ரயில் நிலையம் செல்ல முற்பட்டுள்ளனர்.
அங்கு புஷ்பா பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது, அறிமுகமான பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் ஆகிய மூவர் , அப்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இதனைநம்பி அப்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர்களோடு சென்றுள்ளார். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தினர் தங்குவதற்கு இளைஞர்கள் தாங்கள் தங்கியிருந்த அறையையும் கொடுத்துள்ளனர். இதனால், 6 பேரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில்தான், நதீம், டானிஷ், முர்சித் ஆகிய மூன்று வடமாநில இளைஞர்களும் அப்பெண்ணின் கணவரைக் கட்டிப்போட்டு விட்டு, கணவன் மற்றும் குழந்தையின் கண் முன்னே கத்தியைக் காட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனடிப்படையில் 3 இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். மூன்று இளைஞர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே வட மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.