திருப்பூர் ரிதன்யா தற்கொலை pt
தமிழ்நாடு

திருப்பூர் | திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. அரசியல் தலைவர் குடும்பம் காரணமா? ஆடியோ வைரல்!

திருப்பூர் அருகே கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் கொடுமை தாங்க முடியவில்லை எனக் கூறி திருமணமான இரண்டே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - HALITH RAJA

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இவரது மகள் ரிதன்யா (27) என்பவருக்கு திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன் கவின் குமார் (28) என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

ரிதன்யா தற்கொலை

இந்நிலையில் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் சேர்ந்து கடுமையாக சித்திரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது எனவும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பி விட்டுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உடனடியாக தனது மகளைத் தொடர்பு கொள்ளவே அவ்ரை தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..

இந்நிலையில் மொண்டி பாளையம் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு அப்பெண் காரிலேயே சரிந்து விழுந்துள்ளார்.

ரிதன்யா தற்கொலை

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சேயூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் ரிதன்யாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி 78 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு தூண்டியதாக மருமகன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது அப்பெண் அனுப்பிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.