தமிழ்நாடு

ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த நண்பன்.. நினைவுநாளில் ரத்த தானம் செய்த சகநண்பர்கள்..!

ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த நண்பன்.. நினைவுநாளில் ரத்த தானம் செய்த சகநண்பர்கள்..!

webteam

 விபத்தில் சிக்கிய நண்பனின் நினைவு நாளில்,‌ ரத்த தானம் செய்து இளைஞர்கள்‌ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள‌‌னர்.

செங்கல்‌பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வசித்து வந்தவர் நிர்மல் கு‌மார். இவர் கடந்தாண்டு சென்னைக்கு‌ செல்லும்‌போது மறைமலை நகர் பகுதியில் ஒரு சாலை விபத்தில் சிக்கி அரசு மருத்து‌வமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உரிய நேரத்தில் ‌ரத்தம் கிடைக்காததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் நிர்மலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவு நாளில், மதுராந்தகம் அ‌ரசு மருத்துவமனையில் அவருடைய நண்பர்கள் ரத்தத் தா‌னம் செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலின் நண்பர்கள், “ சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் நண்பன் உயிரிழந்தான். இனி ரத்தம் கிடைக்காமல் எந்த உயிரும் போகக்கூடாது என்பதால் நாங்கள் ரத்ததானம் செய்கிறோம். இனி நாங்கள் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ரத்ததானம் செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

நண்பனின் நினைவுநாளில் சக நண்பர்கள் ரத்ததானம் செய்து அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.