சென்னையில் பாலிவுட் நடிகரை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் தறையினர் மீட்டனர்.
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி தளர்வில்லாத முழு ஊரடங்கின் போது ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது குப்பை தொட்டி அருகே பெண் ஒருவர் அழுக்கான உடையில் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் ஆய்வாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில், அப்பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆய்வாளர், அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு சென்று குளிக்க வைத்து புது ஆடை வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் விசாரித்த போது அந்த பெண்ணின் பெயர் பாரதி என்பதும், அவரது தந்தை சாஸ்திரி பவனில் பணிபுரிந்து விட்டு ஓய்வுப் பெற்றவர் என்பதும் தெரியவந்தது. தந்தை மற்றும் தாய் இறந்த பிறகு பாரதியை யாரும் கவனிக்கவில்லை. 2006- ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பாரதிக்கு 2 சகோதரிகள். அதில் ஒரு சகோதரி இறந்துவிட்டார். மற்றொருவர் திருமணம் செய்து சென்னையில் வசித்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து அந்தச் சகோதரியிடம் பேசி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாரதி தொடர்பாக விசாரிக்கப்பட்டது. சகோதரி கூறும்போது "பாரதி கல்லூரி படிக்கும் போதே தீவிரமான சினிமா ரசிகை. பாலிவுட் நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வந்தார். பி.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்தவுடன் பாரதிக்கு திருமணத்திற்கு மணமகன் பார்க்கும்போது, பாலிவுட் நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக பாரதி மாறினார்" என தெரிவித்தார்.
இதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாரதியை வீட்டிலேயே வைத்து கவனித்து கொள்ளும் படி ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ராஜேஸ்வரியே சென்னை மாநகராட்சியின் தங்கும் விடுதியில் பாரதியை தங்க வைத்தார். பாரதிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் காட்டிய கருணை அனைவரையும் பாராட்டச் செய்துள்ளது.