தமிழ்நாடு

திருநெல்வேலி: மலைப்பகுதியில் சரிந்து விழுந்து இளம்பெண் யானை உயிரிழப்பு

webteam

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே மலைப்பகுதியில் இளம் பெண் யானை சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம் காரையாருக்கு மேலே அடர்ந்த வனப்பகுதிக்குள் இஞ்சிக்குழி, கன்னிக்கட்டி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, கரடி, மிளாமன் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இருக்கின்றன.

இந்த நிலையில் முண்டந்துறை வனசரகத்திற்குட்பட்ட கன்னிக்கட்டி என்ற வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌ செய்து அப்பகுதியிலேயே அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், இது சுமார் 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் செல்லும்போது சரிந்து கீழே விழுந்து இறந்தது என்று கூறினர்.