தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமில் மலர்ந்து தண்டவாளத்தில் முடிந்த காதல் - விசாரணையில் அதிர்ச்சி!

Sinekadhara

விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டனர்.

ரயிலில் சிக்கி உடல்கள் அடையாளம் தெரியாத அளவில் சிதறி சின்னா பின்னமாகி இருந்ததால் உடல்களை காட்பாடி ரயில்வே போலீசார் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், ரயில்வே டிராக்கில் கிடந்த பள்ளிப்பையில் இருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து சிறுமியின் அடையாளத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அதிர்ச்சியாக தகவல்கள் வெளிவந்தன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மாலதி (17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தந்தையை இழந்த மாலதி தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். ஆரணியை அடுத்த கூடலூர் அருகே உள்ள அரியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (19). இவர் போளூர் பகுதியில் உள்ள தனியார் ஐடிஐ பயிற்சி பள்ளியில் பயின்று வந்துள்ளார். ஐடிஐ மாணவன் சக்திவேலுக்கும் 12 ஆம் வகுப்பு மாணவி மாலதிக்கும் இன்ஸ்டாகிராமில் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இருவரின் காதல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதாலும் காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் என்னவாகுமோ என்ற பயத்தாலும் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள பால்வார்த்துவென்றான் கிராமம் அருகே விழுப்புரம் காட்பாடி ரயில்வே டிராக்கில் ஒன்றாக கைகோர்த்து நடந்து சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு சக்திவேல் மற்றும் மாலதி இருவரும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களும் அடையாளம் தெரியாத வகையில் சிதறி கிடந்ததால் உடல்களை மீட்ட காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி பகுதியில் பள்ளி மாணவியும் கல்லூரி மாணவனும் காதல் விவகாரத்தில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.