Stalin-Ravi
Stalin-Ravi Twitter
தமிழ்நாடு

"எனது பரிந்துரையின்றி அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல்" - ஆளுநருக்கு முதல்வர் காட்டமான கடிதம்!

PT WEB

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் தெரிவித்ததை அடுத்து நேற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து, சிலமணி நேரங்களில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார். இந்த சூழலில், ஆளுநருக்கு முதலமைச்சர் எழுதிய பதில் கடிதத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அரசியல் சாசனத்தின் 154, 163 மற்றும் 164வது சட்டப்பிரிவுகள் ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பது போல, முதலமைச்சருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும், ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் முதலமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கான மரியாதையை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றும், மரியாதையாக நடத்துவதே தமிழ் கலாசாரம் எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சரை நீக்கவோ நியமிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதால், அவரது உத்தரவு சட்டரீதியாக செல்லாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சட்ட ரீதியாக அணுகாமல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்றும், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு முதலமைச்சரின் பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.