நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் வசித்துவரும் சிவா என்பவரை காட்டெருமை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். காட்டெருமை ஊருக்குள் புகுந்து தாக்கியது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானவர்கள் தினக்கூலிகளாகவும், கட்டட தொழிலாளர்களாகவும் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் அப்பகுதியில் காட்டெருமை உலாவந்துள்ளது. பலரும் பணியினை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், நடந்து சென்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி தாக்க முற்பட்டிருக்கிறது.
அப்படி சாலையில் நின்று கொண்டிருந்து சிவா (வயது 35) என்பவரை மூர்கத்தனமாக தாக்கியது. இதில் வயிறு, முதுகு உள்ளிட்டப் பகுதிகளில் படுகாயமடைந்த சிவாவை, அருகிலிருந்தவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி உலாவரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல முறை வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தும், வனத்துறை சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய செய்தி: சீன புத்தாண்டு தொடக்கம்: களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்