தமிழ்நாடு

பணம் எடுக்க முடியாத யெஸ் வங்கி வாடிக்கையாளர் : ஆட்டிசம் பாதித்த மகனை நினைத்து கண்ணீர்..

பணம் எடுக்க முடியாத யெஸ் வங்கி வாடிக்கையாளர் : ஆட்டிசம் பாதித்த மகனை நினைத்து கண்ணீர்..

webteam

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஏடிஎம் மையங்களில் குவிந்தனர். வாராக் கடனால் பாதிக்கப்பட்டதை அடுத்து யெஸ் வங்கி நிர்வாகத்தை எடுத்துக்கொண்ட ரிசர்வ் வங்கி, இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள யெஸ் வங்கி ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஆனால் பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அந்த வகையில்தான் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரையும் யெஸ் வங்கி குறித்த அறிவிப்பு பாதித்துள்ளது. யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவர் வடபழனியைச் சேர்ந்த ரங்கராஜன். இவரது மகன் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர். அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆசிரமத்தில் சேர்த்து பராமரித்து வருகிறார் ரங்கராஜன். இதற்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது எனக்கூறுகிறார் ரங்கராஜன்.

மகனின் பராமரிப்புக்காகவும் பிற அன்றாடச் செலவுக்காகவும், மாதந்தோறும் தனது யெஸ் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது ரங்கராஜனின் வழக்கம். அவர் வேறு வங்கியிலிருந்த பணத்தையும் அண்மையில் யெஸ் வங்கிக்கணக்கிற்கு மாற்றியுள்ளார். இந்நிலையில், இந்த மாதம் பணம் எடுக்கச் சென்றபோது, புதிய கட்டுப்பாடுகளைச் சொல்லிய வங்கி நிர்வாகம், கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்று கவலையுடன் கூறினார்.

வங்கி விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடுகள் தன் குடும்பத்தின் வழக்கமான நிதிநிலையை பாதித்திருப்பதாக நம்பிக்கையிழந்த நிலையில் கூறுகிறார். பணம் கைக்கு வராவிட்டால், ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனின் பராமரிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பம் தீராமலேயே வங்கியிலிருந்து கலங்கிய கண்களுடன் அவர் புறப்பட்டுச் சென்றார்.

அதேசமயம் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவம், கல்வி, திருமணம், என தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற தேவைகள் ஏற்படுவோர் அதற்கான காரணத்தை கூறி தேவைப்படும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.