தமிழ்நாடு

மஞ்சப்பை திட்டம்: மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

kaleelrahman

தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் சைக்கிளில் பயணித்தனர்.

தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர்.

நாகூர் ரவுண்டானாவில் இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் மாணவ மாணவிகளோடு சேர்ந்த 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க சைக்கிளில் மஞ்சப்பையை தொங்கவிட்டபடி சென்ற மாணவ மாணவிகள் பசுமையை மீட்டெடுக்க அனைவரும் மஞ்சப்பை பயன்பாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நாகூரில் தொடங்கிய பேரணி நாகை புத்தூர் ரவுண்டானாவில் முடிவடைந்தது.

நாகையில் தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் கல்லூரி மாணவ மாணவிகள் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.