இபிஎஸ், பெருமாள் முருகன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

இபிஎஸ் சொன்ன ’திலுப்பி’ வார்த்தை.. ஆதரவு அளித்த எழுத்தாளர் பெருமாள் முருகன்!

எடப்பாடி பழனிசாமி பேசிய வார்த்தையைக் கேலி செய்யும் விதத்தில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவரிடன் இந்த வார்த்தைக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Prakash J

அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், திலுப்பித் திலுப்பி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். அதாவது, ”ஏங்க திலுப்பித் திலுப்பி அதுக்குள்ள வர்றீங்க” எனக் கூறியிருந்தார். இதையடுத்து, அவரைக் கேலி செய்யும் விதத்தில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவரிடன் இந்த வார்த்தைக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து அவர் தன்னுடைய இணையதளப் பக்கத்தில்(https://perumalmurugan.in/tamilarika10), ”அவர் பேச்சில் பயன்படுத்திய இன்னொரு சொல் ஏளனத்திற்கு உள்ளாயிற்று. ‘திலுப்பித் திலுப்பி அதுக்குள்ள வர்றீங்க’, ‘திலுப்பியும் சொன்னாரு’ என இரண்டு இடங்களில் மூன்று முறை ‘திலுப்பி’ என்று சொன்னார். ‘சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்’ அளவு இது புகழ் பெறவில்லை எனினும் அவர் உச்சரிப்பைக் கேலி செய்து வந்த பதிவுகள் சிலவற்றைக் கண்டேன். அந்தச் சொல் வருமிடத்தை மட்டும் வெட்டி எடுத்துக் காணொலியாகப் போட்டுப் பரப்பியவர்களும் இருந்தனர். ஒருகட்சித் தலைவர் தவறு செய்தால் இன்னொரு கட்சிக்குக் கொண்டாட்டமாகிறது. சரி, அந்த அரசியலுக்குள் போக வேண்டாம்.

‘திலுப்பி’ என்று அவர் சொன்னது தவறல்ல. ‘மீண்டும் மீண்டும்’ என்னும் பொருளில் அவர் அதைக் கையாண்டார். ‘திருப்பி’ என்று பொதுவழக்கில் உள்ள சொல்லைத்தான் ‘திலுப்பி’ என்று அவர் உச்சரித்தார். இது கொங்கு வட்டார வழக்கில் சாதாரணமாக வழங்கும் சொல்தான். எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். என் தலைமுறையினரில் சிலரும் கூடத் ‘திலுப்பி’ என்று சொல்வார்கள். ‘சொன்னதையே திலுப்பித் திலுப்பிச் சொல்றான்’ என்பதில் ‘மீண்டும் மீண்டும்’ எனப் பொருள்படுகிறது. ‘திலுப்பியும் வேணும்னு கேக்கறான்’ என்பதில் ‘மீண்டும்’ அல்லது ‘மறுபடியும்’ என்று பொருள் கொள்ளலாம். ‘கட்டலத் திலுப்பிப் போடு’, ‘மடையத் திலுப்பி உடு’ என்பவற்றில் ‘மாற்று’ எனப் பொருள் வருகிறது. ‘திருப்பி’ என்னும் சொல்லை இப்படியான பொருள்களில் ‘திலுப்பி’ என்று ஒலிப்பது கொங்குப் பகுதி வழக்காகும். பிற வட்டார மொழியில் இந்த ஒலிப்பு முறை இருப்பதாகத் தெரியவில்லை.

ஓர் எழுத்து வருமிடத்தில் பதிலாக வேறொரு எழுத்து வருவதைத் தமிழ் இலக்கணம் ‘போலி’ என்று சொல்லும். அதை வகைப்படுத்தியும் விளக்குவர். ஒரு எழுத்துக்கு எந்த எழுத்து வேண்டுமானாலும் போலியாக அமைந்துவிடாது. இனம், அண்மை, ஒலிப்பு ஒற்றுமை முதலிய காரணங்கள் இருக்கும். இதை மொழியியலும் வகைப்படுத்தி விளக்குகிறது. அவற்றில் ‘ரகரம் லகரமாதல்’ ஒன்று. ரகரமும் லகரமும் இடையின எழுத்துக்கள். யரலவழள என்னும் வரிசையில் ரகரமும் லகரமும் அடுத்தடுத்து அமைகின்றன. ஆகவே ரகரம் வருமிடத்தில் லகரம் வருவது இயல்பானது. அதே போல லகரம் வருமிடத்தில் ரகரம் அமைவதும் உண்டு. லகரம் ரகரமாதலுக்குச் செய்யுளிலேயே சான்றுகள் உள்ளன. பந்தல் – பந்தர் குடல் – குடர் சாம்பல் – சாம்பர் கூதல் – கூதர் ஆகியவற்றைச் சான்றாகச் சொல்லலாம். லாரியை ‘ராரி’ என்று சொல்லும் வழக்கம் இன்றைய பேச்சு மொழியில் இருக்கிறது. ரகரம் லகரமாதலுக்கும் பேச்சு வழக்கில் சில சான்றுகள் கிடைக்கின்றன. சமீபத்தில் ‘லப்பர் பந்து’ என்னும் தலைப்பில் திரைப்படம் ஒன்று வந்தது.

‘ரப்பர் பந்து’ தான். பேச்சு வழக்கில் ‘லப்பர் பந்து.’ பேச்சு வழக்கையே தலைப்பாகக் கொடுத்துவிட்டனர். பள்ளிக் குழந்தைகள் எழுதியதை அழிக்கப் பயன்படுத்தும் ரப்பரை ‘அழிலப்பர்’ என்று சொல்வதைக் கேட்கலாம். பென்சில் லப்பர், இங்க் லப்பர் ஆகியனவும் உண்டு. ‘மரக்கறி’ என்பதை ‘மலக்கறி’ எனச் சில பகுதிகளில் வழங்குவதாகவும் தெரிகிறது. திலுப்பி என்பதும் லப்பர் போன்ற மாற்றம்தான். திலுப்பி என்று ஒலிப்பது வட்டார வழக்கு. தவறல்ல” என அதில் தெரிவித்துள்ளார்.