தமிழ்நாடு

சாகித்ய அகாடமி விருது பெற்றார் எழுத்தாளர் இமையம்

Sinekadhara

அறிவுலகில், சமூகத்தில் இடையறா உரையாடலை தனது படைப்புகள் மூலம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர் இமையத்துக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இமையம், ஆசிரியர், எழுத்தாளர், திராவிட இயக்கச் சிந்தனையாளர் என பல முகங்களைக் கொண்டவர். அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்டவரான இமையத்தின் முதல் படைப்பு 'கோவேறு கழுதைகள்' 1994 ஆண்டு வெளியானது. 25 ஆண்டுகளாக தொடர்ந்து படைப்புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இமையத்துக்கு ’செல்லாத பணம்’ நாவலுக்காக 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் இமையத்துக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், ’செல்லாத பணம்’ என்ற தனது நாவல் குறித்து பகிர்ந்துகொண்டார். மேலும், அரசியல் அதிகாரம் போல, எழுத்து அதிகாரமும் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார் இமையம்.

’செல்லாத பணம்’, ’ஆறுமுகம்’, ’செடல்’, ’எங் கெத’ உள்ளிட்ட 6 நாவல்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு நெடுங்கதையையும் இமையம் எழுதியுள்ளார். அடுத்ததாக, 'இப்போது நான் உயிரோடு இருக்கிறேன்' என்ற நாவல் ஜனவரியில் வெளியாகும் என்று இமையம் தெரிவித்துள்ளார். இளநிலை ஆய்வு நல்கை, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் தமிழ்த்தென்றல் திருவிக விருதுகளை பெற்றுள்ள இமையத்துக்கு 2015 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான தமிழன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது புதிய தலைமுறை. இமையத்துடன் சேர்த்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 22 படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.