ஆளுநர் ஆர்.என்.ரவி - உச்சநீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநரை ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு!

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ராஜீவ்

2025-26 நிதியாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அதன் முதல் நாளில் தமிழக சட்டப்பேரவையின் முதல் நாளில் உரையாற்ற வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர், தேசிய கீதம் இசைக்கவில்லை எனக் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்று விட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், “தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல்பாடு அவருக்கு தமிழக ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லாததையே காட்டுகிறது. விளம்பரம் தேடும் நோக்கில் ஆளுநர் செய்துவிட்டு வருகிறார்.

மேலும் தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்துடன் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பது ஆண்டுக்கு ஆண்டு மோசமான நிலைக்கு மாறிவருகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்து கொள்கிறார் என்பதையே வெளிக்காட்டுகிறது. சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன்பாக அவையை விட்டு வெளியேறக் கூடாது. ஆனால் ஆளுநர் ரவி வெளியேறியுள்ளார்.

மேலும் அரசு தயார் செய்து கொடுக்கும் உரையில் பல வாக்கியங்களை படிக்க மறுக்கிறார். குறிப்பாக உரையில் உள்ள ‘திராவிட மாடல்’ எனும் சொல்லாடல் மற்றும் ‘சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது’ போன்ற வாக்கியங்களை தவிர்க்கிறார். இவ்வாறு உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தை விட்டு வெளியேறுவது ஜனநாயக செயல்பாட்டிற்கு எதிரானது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

பரிந்துரையின்றி அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்குவது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பதவி பிரமாணம் செய்து வைக்காதது, அரசு அனுப்பும் மசோதாக்களில் கையெழுத்திட மறுப்பது, மேலும் காலம் தாழ்த்துவது என ஆளுநர் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டின் திராவிட கலாச்சாரத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக ஆளுநர் கருத்து தெரிவித்து வருகிறார். எனவே அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை உடனடியாக நீக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.