செய்தியாளர் - M.மீரா
திமுக ஆட்சிக்காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதாக, கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் தான், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஸை காவல்துறை அதிரடியாக கைதுசெய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அக்டோபர் 27 நள்ளிரவு பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். மேலும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யமூர்த்தி, அவருக்கு நவம்பர் 6, 2026 வரை நீதிமன்றக் காவல் (Remand) விதித்து உத்தரவிட்டுள்ளார்
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்து அழைத்து சென்ற போது அவரின் ஆதரவாளர்கள் காவல்துறை வாகனத்தை மறித்து பொய் வழக்கு போடாதே, பொய் வழக்கு போடாதே என முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது புழல் சிறை வளாகத்தின் முன்பாக வேலூர் திமுக கவுன்சிலர் மற்றும் உதயநிதி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரான டீட்டா சரவணன் தவெக தலைவர் மற்றும் தற்போதைய முதல்வர் விஜய் குறித்து, கரூரில் முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? என்ற தொனியில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புழல் காவல்துறையினர் டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் வழக்குப்பதிவைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிப்பதற்காகப் புழல் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.