தமிழ்நாடு

கோதுமை மாவில் நெளிந்த புழுக்கள் - உடல் உபாதை ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

webteam

கோதுமை மாவில் புழுக்கள் நெளிந்ததால், அதனை வாங்கிய நபர் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மின் நகர் பகுதியில் உள்ள பல்லவன் சாலை பகுதியில் உள்ள மளிகை கடையில் அதேப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கோதுமை மாவு ஒன்று வாங்கி உள்ளார். அந்த கோதுமை மாவில் உணவு செய்து உண்ட அவரது குடும்பத்தினருக்கு உடல் உபாதை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சேகர் அந்த கோதுமை மாவை சல்லடையில் இட்டு துய்மைப்படுத்தியுள்ளார். அப்போது அந்த மாவில் புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்துள்ளது. இதனைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட மளிகை கடைக்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மளிகை கடைக்காரர் கோதுமை மாவு கோயம்புத்தூரிலிருந்து வந்ததாகவும் காலாவதி தேதி இன்னும் முடிவடையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சேகர் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் உணவு கட்டுப்பாட்டு துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரி அனுராதாவிடம் கேட்ட போது “இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் சம்பந்தப்பட்ட கடை விடுமுறையில் உள்ளது. ஆகையால் நாளை தான் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.