தமிழ்நாடு

உலக சுற்றுலா தினம்: கீழடி அகழாய்வு தளத்தில் சிறப்பு கண்காட்சி

kaleelrahman

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கீழடி அகழாய்வு தளத்தில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பில் கீழடியில் சிறப்பு கண்காட்சி மற்றும் தமிழர்களின் சிறப்பு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட கலைபொருட்களும் , பழமை வாய்ந்த இசைக்கருவிகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழமையான இசைக்கருவிகளை இசைப் பள்ளி ஆசிரியர் ஆண்ட்ரூஸ் பொதுமக்களுக்கு வாசித்துக் காண்பித்தார்.

இந்த சிறப்பு கண்காட்சியை காண மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்த கண்காட்சிகளை பார்த்துச் செல்கின்றனர்.