தமிழ்நாடு

'யானைகளுக்கு வழி விடுங்கள்' இன்று உலக யானைகள் தினம்

'யானைகளுக்கு வழி விடுங்கள்' இன்று உலக யானைகள் தினம்

webteam

காட்டு வளங்களாக கருதப்படும் யானைகளை பாதுகாக்கும் வகையில், உலக யானைகள் தினம் இன்று கொண்டாப்படுகிறது. 

உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, நம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன. பிரம்மாண்ட உடலமைப்புடன் ஒய்யாரமாக ஆடி அசைத்து செல்லும் அதன் அழகை காண விரும்பாதவர்களே இல்லை எனலாம். இந்நிலையில் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுவதும் இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல்கள் உருவாவதும் அதிகரித்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

யானைகளின்  வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதே அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் படையெடுக்க பிரதான காரணமாய் அமைந்துவிடுகிறது. அதேவேளையில் மனிதர்களின் அலட்சிய செயலால் காட்டு யானைகள் பலியாவதும் தொடர்கதையாகி வருவதாக வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய அதிரடி தீர்ப்பை அடுத்து மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 27 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

இதேபோன்று மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுத்தால், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான உறவு இனிமையானதாக மாறும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.