தமிழ்நாடு

பாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க்? - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை

பாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க்? - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை

webteam

தென்காசி அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்ததாக பஞ்சாயத்து கிளார்க் மீது புகார் அளித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறையைச் சேர்ந்தவர் மணிபாரதி. இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் லட்சுமி ஊரில் தனியாக வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் பொதுப்பாதையை அதே பகுதியில் பஞ்சாயத்து கிளார்க்காக உள்ள செல்வராஜ் என்பவர் ஆக்கிரமித்து அதில் செல்லவிடாமல் தடுத்து வருவதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் லட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆனால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் விஷம் அருந்திய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில் “இந்த பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாய்நாட்டைக் காக்க சென்ற ராணுவ வீரரின் குடும்பம் இன்று தாயை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

லட்சுமியின் மகள் ரெங்கா லட்சுமி மீது செல்வராஜின் தந்தையை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடி மைய பணியாளராக உள்ள ரெங்கா லட்சுமி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை உடலை வாங்கமாட்டோம்” எனத் தெரிவிக்கின்றனர்.