தேனியில் வரதட்சணை கொடுமை காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (34). இவர் கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்து கரம்பிடித்தார்.
இந்நிலையில் 3மாத கர்ப்பிணியான இவரது மனைவி முத்துலட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக முத்துலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி முத்துலெட்சுமியின் தாயார் மின்னல் கொடி தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகி இருப்பதால், இவ்வழக்கை பெரியகுளம் சார் ஆட்சியர் விசாரணைக்கு காவல்துறையினர் பரிந்துரைத்தனர். இதையடுத்து இவ்வழக்கை விசாரணை செய்த சார் ஆட்சியர் ரிஷப், வரதட்சனை கொடுமையால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததை உறுதி செய்தார். தொடர்ந்து தற்கொலை வழக்கை வரதட்சனை கொடுமை வழக்காக மாற்றி கணவர் பிரபாகரனை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவான அவரது தாயார் பிச்சையம்மாளை தேடி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.