விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் பிரியாவின் உடலை சுமந்து சென்ற எஸ்.பி வந்திதா பாண்டே
விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் பிரியாவின் உடலை சுமந்து சென்ற எஸ்.பி வந்திதா பாண்டே புதியதலைமுறை
தமிழ்நாடு

புதுக்கோட்டை | புது வேகத்தடையால் பிரிந்த பெண் காவலர் உயிர்.. கனத்த நெஞ்சோடு உடலை சுமந்த எஸ்.பி!

PT WEB

செய்தியாளர் - முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு 2-ம் எண் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 7ம் தேதி இரவு பணியில் இருந்து வீட்டிற்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.

புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, எந்தவித அடையாளமும் இன்றி புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் அவர்களது வாகனம் ஏறி உள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது கீழே விழுந்த காவல் ஆய்வாளர் பிரியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் யாரும் எதிர்பாராவிதமாக நேற்று மதியம் சிகிச்சைப் பலனின்றி காவலர் பிரியாவின் உயிர் பிரிந்தது. இதனால் அவரது குடும்பத்தாரும், உடன் பணியாற்றியவர்களும் சோகத்தில் மூழ்கினர்.

sp vadhanthitha

இந்நிலையில் காவல் ஆய்வாளர் பிரியாவின் இறுதிச் சடங்கில் புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பங்கெடுத்துள்ளார். அங்கு காவல் ஆய்வாளர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, மயானம் வரை அவரது உடலைச் சுமந்து சென்றார் எஸ்.பி வந்திதா பாண்டே. தொடர்ந்து அவரது தலைமையில் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க ஆய்வாளர் பிரியா உடலுக்கு காவல்துறையினர் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

வேலைக்குச் சென்ற அம்மா வீடு திரும்புவார் என்று வீட்டில் காத்திருந்த பிரியாவின் மகள்கள் 2 பேருக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் குடும்பத்தார். எந்த வித அடையாளமும், அறிவிப்பும் இன்றி வைக்கப்பட்ட வேகத்தடையால் நேர்ந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.