சென்னையில் மகளை திருமணம் செய்து தர மறுத்ததால் சாலையின் நடுவே பெண்ணை வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை கிண்டி நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரேவதி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அத்துடன் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தார். இதனிடையே ரேவதியின் மூத்த மகளுக்கும், கார் ஓட்டுநர் வினோத் என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த ஓராண்டுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. பின்னர் வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என்பதால் திருமணம் செய்து கொடுக்க ரேவதி மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் வினோத், ரேவதியை பலமுறை தொடர்புகொண்டு சொன்னபடி திருமணம் செய்துகொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் விடாப்பிடியாக இருந்த ரேவதி, தன் மகளை வினோத்திற்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளர். இதனால் ரேவதி மீது வினோத்திற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் ரேவதி. கிண்டி வண்டிக்காரன் தெருவில் ரேவதி வந்தபோது, நண்பர்களுடன் சேர்ந்து வழிமறித்த வினோத் மீண்டும் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரேவதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், ரேவதியின் கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் ரேவதி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத் உள்ளிட்ட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.