தமிழ்நாடு

கோவை ஈஷா மையத்தில் இருந்து ஓடி தப்பித்து மாயமான பெண் சடலமாக மீட்பு.. திடுக்கிடும் தகவல்!

webteam

கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் காணாமல் போன நிலையில், கோவை ஆலந்துறை பகுதியில் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அரசு பணியாளர் காலணியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் சென்ற மாதம் 11ம் தேதி கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக சென்றிருந்தார். ஒரு வாரகால யோகா பயிற்சி முடிந்து கடந்த 18ம் தேதி அவரை அழைப்பதற்காக கணவர் பழனிக்குமார் ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் சுபஸ்ரீ வெளியே வராததால் ஈஷா யோகா மைய நிர்வாகத்திடம் தனது மனைவி குறித்து கேட்டுள்ளார். அப்போது பயிற்சி முடித்து காலையிலேயே சுபஸ்ரீ வெளியே சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாலை வரை அவர் காத்திருந்த நிலையில் சுபஸ்ரீ காணாமல் போனது குறித்து கோவை ஆலந்துறை காவல் நிலையத்தில் கணவர் பழனி குமார் புகார் அளித்தார்.

அதனை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் செம்மேடு பகுதியில் சுபஸ்ரீ பரபரப்பாக ஓடிவந்த காட்சிகள் சிசிடிவி வழியாக தெரியவந்தது. ஈஷா யோகா மையத்தில் பயிற்சி முடிந்து வெள்ளை நிற ஆடையோடு அவர் ஓடி வந்ததும் ஒரு காரில் ஏறிச் சென்றதும் காட்சிகள் மூலம் தெரியவந்தது.

தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக ஆலந்துறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட வந்த நிலையில் இன்று செம்மேடு பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தீயணைப்புத்துறை உதவியோடு சுபஸ்ரீ உடல் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவரது உடலை மீட்கும் போது கையில் இருந்த மோதிரம் மற்றும் ஈஷா யோகா மையத்தின் உடைய பேண்ட் ஆகியவற்றை உறுதி செய்து கணவர் சுபஸ்ரீ என காவல்துறைக்கு உறுதி அளித்தார். இதனை அடுத்து தொடர்ச்சியாக சுபஸ்ரீ மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.