சென்னை காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் கேட்டு ஏராளமான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. இதனால் ஓரளவிற்கு மக்கள் நிம்மதி அடைகின்றனர். ஆனால் சென்னையை எடுத்துக் கொண்டால் அனல் பறக்கும் வெயில்தான். சென்னை மக்கள் மழையை பார்த்தே மாதக் கணக்கு ஆகிறது. ஒரு சின்ன மழையாவது வராதா என்ற ஏக்கத்தில் சென்னை மக்கள் உள்ளனர். அத்துடன் தண்ணீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில் சென்னை காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் கேட்டு ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு, செழியன் நகர், அசோக நகர், மார்க்கெட் பாரம், மற்றும் சூரியன் நாராயணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடி தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து பல முறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காசிமேடு போலீசார் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு குடிநீர் தண்ணீர் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.