தமிழ்நாடு

குழந்தை பிரசவித்த மறுதினமே கொரோனாவால் இறந்த பெண் காவலர்... அரசிடம் உதவி கோரும் உறவினர்கள்

குழந்தை பிரசவித்த மறுதினமே கொரோனாவால் இறந்த பெண் காவலர்... அரசிடம் உதவி கோரும் உறவினர்கள்

நிவேதா ஜெகராஜா

கொரோனாவுடனான போராட்டத்தில், குழந்தை பிரசவித்த மறுதினமே சென்னையை சேர்ந்த பெண் தலைமைக் காவலரொருவர் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2-வது அலை தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும், மூன்றாவது அலை உருவாகாமல் தடுக்கும் நடவடிக்கையிலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னமும் முழுவதுமாக கட்டுக்குள் வந்துவிடவில்லை. கொரோனா பரவலில், அதிக அபாயம் உள்ளவர்களாக முன்களப்பணியாளர்களே இருக்கின்றனர். அந்தவகையில் முன்களப்பணியாளர்களான சென்னை காவல்துறையினர் இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், கொரோனா முதல் அலையில் 10 போலீசாரும், 2-வது அலையில் 28 போலீசாரும் இறந்திருப்பதாக தரவுகள் சொல்கின்றன.

இந்நிலையில், இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமைக்காவலர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவ 47 வயதான வசந்தா, சென்னை மத்திய குற்றப்பிரிவில் பெண் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்தார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 28ம் தேதியன்று எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்றைய தினம் (04.08.2021) அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

குழந்தை பிறந்தபிறகு, கொரோனாவின் தாக்கத்தினால், இன்று (ஆக.5) அதிகாலை பெண் தலைமைக்காவலர் வசந்தா சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். இச்சம்பவம், பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் இறந்து போன வசந்தாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், காவல்துறை தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவரின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

பெண் தலைமைக் காவலராக இருந்த வசந்தாவிற்கு, சொந்த ஊர் திருவாரூர். இவருக்கு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவரின் கணவர் பாண்டியன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக சென்னையில் இருந்து வருகிறார்.

இறந்த காவலரின் உடலுக்கு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை சவ கிடங்கில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு, சுகாதாரத்துறை ஊழியர்களின் உதவியுடன் வசந்தாவின் உடலை சொந்த ஊரான திருவாரூருக்கு காவலரான உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

- செய்தியாளர்: சுப்ரமணியன்