சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பெண்கள் சாலையை மறித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் வள்ளுவர் சாலையில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையை மறித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வளசரவாக்கம் 155 வட்டம் மூகாம்பிகை நகர் பகுதியில் உள்ள தனியார் குடிநீர் ஆலையை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் தங்களது பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் குடிநீர் ஆலையில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் இரண்டு கிலோமீட்டர் வரையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.