தமிழ்நாடு

பெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள் 

பெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள் 

webteam

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதமும் விதிக்காவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நாகை கீழ்வேளூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உடலை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஈஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, "கொலை குற்றத்தை விட பாலியல் குற்றங்கள் கொடூரமானது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர், வாழ்நாள் முழுவதும் அந்த கொடூரமான நிகழ்வின் நினைவுகளுடன் வாழ வேண்டியது வரும். தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காளான்கள் போல் பெருகி வருகின்றன. 

இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வளைகுடா நாடுகள்,  ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள், எகிப்து, ஈரான் போன்ற நாடுகளில் இந்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்தி கல் எரிந்து கொல்லப்படுகின்றனர்.

மகாத்மா காந்தி, சாலையில் ஒரு பெண் இரவில் தனியாக நடந்து செல்லும் நாள் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுவேன் என்றார். காந்தியின் கருத்துபடி இந்தியாவில் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதமும் விதிக்காவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காது. 

இந்த வழக்கில் மனுதாரருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாமல் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இதனால் தூக்கு தண்டனைக்குள் செல்ல விரும்பவில்லை. மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது"  என உத்தரவிட்டனர்.