தமிழ்நாடு

இப்படியெல்லாமா சீட்டிங் செய்வாங்க..! காவலர் தேர்வில் அதிகாரிகளை மிரள வைத்த பெண்

Sinekadhara

கான்ஸ்டபிள் பணி உடற்தகுதி தேர்வில் உடல் எடையை அதிகரிக்க ஆடைமேல் ஆடையாக 4 பேன்ட் அணிந்து வந்த பெண் தகுதி நீக்கம் செய்து போலீசாரால் அனுப்பப்பட்டார்.

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள் ரேடியோ டெக்னீசியன் 12 டேக் ஹேண்ட்லர் 29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதித்தேர்வு கடந்த 19ம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் துவங்கி நடந்து வருகிறது. தினசரி 750 பேர் அழைக்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடக்கிறது. இதுவரை நடந்த தேர்வில் 1,844 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொற்று காரணமாக தேர்வில் பங்கேற்க முடியாத ஆண்களுக்கு வரும் 21ஆம் தேதி உடல் தகுதித்தேர்வு நடக்கிறது.

மொத்த கான்ஸ்டபிள் பணி இடத்தில் 32 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று துவங்கியது. 200 மீட்டர் ஓட்டம் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டது. நேற்றைய தேர்வுக்கு அழைக்கப்பட்ட 750 பேரில் 324 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் உடற்தகுதியுடன் 188 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்றைய உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்த ஒரு பெண் மெலிந்த உடல் அமைப்புடன் இருந்தார். ஆனால் அந்தப் பெண் உடற்தகுதிக்கு தேவையான 45 கிலோ எடையுடன் இருந்தார். மேலும் அவர் நடந்து செல்லும முறை சற்று வினோதமாக இருந்தது. இதனால் உடல் தகுதித்தேர்வு நடத்திய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், அப்பெண்ணை வரச்சொல்லி பெண் காவலர்கள் மூலம் சோதனைசெய்ய உத்தரவிட்டனர்.

சோதனை செய்தபோது அப்பெண் பேன்ட் மேல் பேன்ட் அணிந்து இருந்ததும், அதில் ஒரு ஜீன்ஸ் மீது மூன்று லேயர் பேண்ட் அணிந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அணிந்திருந்த ஆடைகள் 2.2 கிலோ எடை இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கான்ஸ்டபிள் தேர்வுக்கு வந்த பெண் 43 கிலோ எடையில் இருந்ததால் உடல் எடை அதிகரித்து காட்டுவதற்காக நான்கு பேண்டுகள் அணிந்து வந்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.