ஹேமலதா - சந்துரு
ஹேமலதா - சந்துரு  PT WEB
தமிழ்நாடு

தேனி | தலைமறைவான காதல் கணவன்? விரக்தியில் புதுமணப்பெண் விபரீத முடிவு... உடலை வாங்கமறுத்த உறவினர்கள்!

விமல் ராஜ்

செய்தியாளர் - மலைச்சாமி

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவருடைய மகள் ஹேமலதா (19). இவரும் சிலமலைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவரும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து இவர்கள் சில நாட்கள் சந்துருவின் தாத்தா சேதுராமனின் வீட்டில் தங்கியுள்ளனர். ஒருகட்டத்தில் கோம்பை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

உயிரிழந்த ஹேமலதா

இதனையடுத்து, இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், ஹேமலதாவும், சந்துருவும் மைனர் என்பதால், இருவருக்கும் அறிவுரை வழங்கி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்

உறவினர்கள் போராட்டம்

இந்தநிலையில், சந்துருவின் பெற்றோர் சந்துருவை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர் என ஹேமலதா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் சந்துருவைத் தேடி வந்தனர். இதற்கிடையில், கணவனைக் காணாமல் மன உளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

ஹேமலதாவின் தாய்

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த, போலீசார் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான கணவன்!

இதனைத்தொடர்ந்து, காதலித்து திருமணம் செய்து, தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு, தலைமறைவான சந்துரு மற்றும் அவருடைய குடும்பத்தினரைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி, உயிரிழந்த ஹேமலதாவின் தாய் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.