தமிழ்நாடு

லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி நூதன முறையில் கொள்ளையடிக்கும் பெண்

webteam

வாலிபர்களை மயக்கி நூதன முறையில் நகைகளை கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி வாலிபர்களிடமும், பணம் வைத்திருப்பவர்களிடமும் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா வண்டியில் காட்டன் சாரி, ஜீன்ஸ்பேன்ட், சுடிதார், கூலிங்கிளாஸ் என மாடர்னாக வலம் வரும் ஆஷா சவுந்தர்யா என்ற பெண், வாலிபர்கள், முதியவர்களுக்கு லிப்ட் கொடுப்பது போல் நடித்து அவர்களை தனது வண்டியில் ஏற்றி நெருக்கமாக அமர வைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை வழி மறித்து பேசிய அந்த பெண், அவரிடமிருந்து பணம், நகைகளை பறித்துவிட்டு தப்பியுள்ளார். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமரவில் பதிவாகியுள்ளது. கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரை ஏற்று, கண்காணிப்பு கேமரா கட்சிகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியது வடபழனி காவல்துறை. கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவான அவரது உருவத்தைக் கொண்டு அவரை பிடிக்க ஆயத்தமான காவலர்கள் அவரை நெருங்கினர். இதையறிந்து, சென்னையிலிருந்து பெங்களூரு தப்பிச் செல்ல முயன்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ஆஷா சவுந்தர்யா மீது 6 நகைப் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் இருந்த இவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து, சென்னையில் நூதன கொள்ளையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.