சபரிமலை மீது ஏறிய நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் பெண் நிருபர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாத வழிபாட்டுக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர்.
அத்துடன் 10 வயதுக்கு மேலிருந்து 50 வயதுக்குள் உள்ள பெண்கள் சபரிமலை மேல் ஏறாமல் தடுக்க, சபரிமலைக்குச் செல்லும் வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்த, பதிலுக்கு பக்தர்களும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே நியூ யார்க் டைம்ஸ் பத்திரைகையின் பெண் நிருபரான சுபாஷினி ராஜ் என்பவர் இன்று சபரிமலையில் ஏற முயன்றார். மலைப்பகுதி வழியாக ஏறிச்சென்ற அவர் மரக்கூட்டம் என்ற இடத்தை அடைந்தார். அங்கிருந்த சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல சில கிலோ மீட்டர்கள் தான். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 15 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு அப்பெண்ணை திரும்பிச் செல்லுமாறு சத்தம் போட்டனர். அந்தப் பெண் அவர்களது எதிர்ப்பையும் மீறி முன்னோக்கி சென்றுள்ளார். அப்போது ஐயப்ப பக்தர்கள் அவரை தடுத்து நிறுத்த, தனக்கு 50 வயது நிரம்பிவிட்டதாக தவறான தகவலை அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அப்பெண் சிறிது தூரம் சென்ற பின்னர், அவர் ஐம்பது வயதுக்கு குறைவான பெண் என்பது தெரியவந்துள்ளது. உடனே அங்கிருந்த பக்தர்கள் தங்களை கைகளால் சங்கிலி அமைத்து அப்பெண்ணுக்கு வழி விடாமல் தடுத்துள்ளனர். மேலும் பொய் கூறி மேல வந்ததால், அவரை சத்தம் போட்டுள்ளனர். அத்துடன் ‘சுவாமி ஐயப்பா’ என முழக்கமிடுமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 50 காவல்துறையினர் இந்த சம்பவத்தை பார்த்துள்ளனர். உடனே சுபாஷினி அருகே வந்த காவல்துறையினர், “நீங்கள் மலையேற நினைத்தால் தனியாக ஏற அனுமதிக்க முடியாது. உங்கள் தோழி அல்லது தோழர் யாருடனாவது செல்ல வேண்டும். ஏனென்றால் சூழ்நிலை சரியில்லை, இந்த சமயத்தில் நீங்கள் சன்னிதானத்திற்கு தனிமையில் செல்வது சரிப்படாது” என தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது நண்பரும், நிருபருமான ஒருவருடன் அவர் மலைமீது ஏற நினைத்துள்ளார். ஆனால் அங்கிருந்த நிலையை கண்டு அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அப்பெண் மலையிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். ஆனாலும், நேற்றைய தினம் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் சபரிமலைக்கு சென்ற பெண்களில் சுபாஷினியே கோயிலுக்கு அருகாமையில் சென்ற பெண் ஆவார். மற்ற பெண்கள் எல்லாம் சபரிமலை செல்லும் வழியிலேயே போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டனர்.