சாலை விபத்தில் பெண் காவலர் மற்றும் அவர் கணவர் மரணம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சிதம்பரம்: திருமணமான 2 மாதங்களில் சோகம்... பெண் காவலர் மற்றும் அவரின் கணவர் சாலை விபத்தில் மரணம்!

சிதம்பரம் அருகே சித்தலப்பாடி கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் அவரின் கணவர் உயிரிப்பு. திருமணமான 2 மாதங்களில் உயிரிழந்த சோகம். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: R மோகன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவர் சிதம்பரம் அருகே குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் கலைவேந்தன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இளவரசி - கலைவேந்தன்

இந்நிலையில் உதவி ஆய்வாளர் இளவரசி தனது கணவர் கலைவேந்தனுடன் சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு கிராமத்தில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சித்தலப்பாடி கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே கொடியம்பாளையம் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களின் இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்துடன் இழுத்துச் செல்லப்பட்டனர் இளவரசி மற்றும் கலைவேந்தன். அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்துக்கு அடியில் இடுபாடுகளில் சிக்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய அரசுப்பேருந்து

இந்த விபத்து சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம்தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டே மாதத்தில் இருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.