ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த, ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையத்தில் இருந்து கெட்டவாடி என்ற ஊருக்குச் சென்ற பேருந்து, அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்தனர். அப்போது, ஒரு இருக்கையின் அடிப்பகுதியில் தங்கச் சங்கிலி கிடப்பதை நடத்துநர் மகேஷ் பார்த்துள்ளார். இதுபற்றி மகேஷூம், ஓட்டுநர் ரமேஷூம் பயணிகளிடம் கூறி, தாலிக்கொடியை தவறவிட்ட பயணி யார் என விசாரித்து, தங்களை வந்து தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளனர்.
அவர்கள் விசாரித்ததில், பேருந்து கெட்டவாடிக்குச் சென்றபோது அதில் பயணித்த துண்டம்மா என்ற பெண்தான், தாலிச் சங்கிலியை தவறவிட்டவர் எனத் தெரியவந்தது. பிறகு அந்தப் பெண்ணை வரவழைத்து அவரது தங்கச் சங்கிலியை நடத்துநரும், ஓட்டுநரும் ஒப்படைத்தனர். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இந்த நேர்மையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.